கவிதைக்கு ஓர் கவிதை
***********************
நாட்டின் விடுதலைக்கு
ஓர் கவிதை-அன்றாடம்
வீட்டில் சிறைப்பட்ட
வஞ்சியரின் விடுதலைக்கு
ஓர் கவிதை-பூத்து
வரும் இயற்கையினைப்
பாராட்டி ஓர் கவிதை-
சோற்றுக்கில்லாத சோகத்தை
சொல்லிடும் ஓர் கவிதை-
அதனால் உண்டான தார்மீக
கோபத்தை கொட்டிடும்
ஓர் கவிதை-
பாஞ்சாலியின் சபதத்தை
பகர்ந்திடுவது ஓர் கவிதை!
பாரதத்தின் பெருமையினை
புகன்றிடுவது ஓர் கவிதை!
சாதி மத பேதங்களை
சாடிடுவது ஓர் கவிதை!
சிறு பிள்ளைகளும் களித்திடவே
நீதி சொல்லும் ஓர் கவிதை!
காதல் தருகின்ற இன்பத்தைக்
காட்டுகின்ற கவிதை!
கண்ணனையே எல்லாமாய்
காட்டுகின்ற கவிதை!
புரட்சியின் மேன்மையை
போற்றிடுமோர் கவிதை!
குயிலின் கீதத்தில்
கரைந்திடுமோர் கவிதை!
பாரதி!
நீ பாடாத பொருளில்லை;
அதனால் எங்கள்
பாட்டின் பொருள்
நீயன்றி வேறில்லை;
நீயே ஓர் கவிதை!
இது உனக்கு நாம்
அஞ்சலி செய்யும் சிறுவிதை!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment