Tuesday, August 12, 2008

ஹைகூ:



ரோஜாவின் வேதனை!


மனிதனே!
உன் காதலியின்
புன்னகையை
உயிர்ப்பிக்க
என் உயிரை
எடுக்கிறாயே!

****************


சாலைப் பாதுகாப்பு குறித்த கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற எனது படைப்பு இது!

கவனம் தப்பினால் மரணம் !!

சாலையில் செல்லும் தோழா!
சில சேதிகள் சொல்வேன், கேளாய்!!
தனித் தனிப் பாதைகள் தந்த பின்னும்
தடம் மாறிய பயணமும் ஏனோ?
சிறிய தாமதம்: அரை மணி விரயம்;
வேகமாய் விரைந்தோர்க்கு வாழ்க்கையே விரயம்!
செல்லப் போவது மனையா? மயானமா?
நினைவில் கொண்டால் நிலைக்கும் ஆயள்!

விருந்தில் மதுவருந்தி வீடு சேர நினைத்து
காடு சேர்ந்து காற்றானோர் கதை பலவுண்டு;
வீணான முயற்சியேன்? விட்டில் பூச்சி நிலையேன்?
வாழ்வை முடிக்க வ்ழி தேடிப் போவதேன்?
ஓடும் வாகனம் எந்திரம்: சரி தான்;
ஓட்டுநர் யாரும் எந்திரமில்லையே?
ஓய்வும் உறக்கமும் இல்லாமல் போனால்
ஒட்டுமொத்த ஓய்வு எல்லார்க்கும் தானே!

பரபரப்பான சாலையில் பரிதவிக்கும் ஓருயிர்!
பரிதாபப்பட்டபடி பல உயிர்கள் சுற்றிலும்;
அடித்துச் சென்றது அம்பாஸிடரா? மாருதியா?
அரைமணி நேரமாய் ஆராய்ச்சி நடக்கிறதாம்!
விரையும் உயிர் மீட்க முதலுதவி முக்கியம்!
வார்த்தைகளை சேமித்து வாழ்க்கைதனை காப்போம்!
விதிகள் நினைவிலும் விழிகள் வீதியிலும்
விலகாமல் இருக்கட்டும்!
விபத்துகள் இல்லாமல் மறையட்டும்!!

******************

No comments: