Friday, January 9, 2009

தோழியின் பரிசுகள்

தோழியின் பரிசுகள்
******************

முன்பு ஓர் பிறந்த நாளுக்கு
அவள் பரிசளித்த பேனாக்கள்
இன்று எழுத இயலாத நிலையில்...

மற்றுமொரு பிறந்த நாளன்று
தந்த வெள்ளி மோதிரம்
தற்போது கருத்த மோதிரமாய்...

அவள் கொடுத்த வால்பேப்பர்
வீட்டின் கடைக்குட்டி உபயத்தால்
இப்போது பேப்பர் பேப்பராய்...

அவள் கொடுத்த சாவிக்கொத்து
'அழகாய் இருக்கிறதே' என்ற
அண்ணியின் இடுப்பில்...

பிரேம் போட்ட படமொன்று
வீட்டின் வெள்ளையடிப்பு
வைபவத்தில் கடல் சென்ற காயமாய்...

ம்ம்..போனவை போகட்டுமே!

ஆண்டுகள் பல கடந்தும்
ஒவ்வொரு முறையும்
அவள் பரிசாய் அளித்த
நட்பும், நல்தோழமையும்
அழியாத மெருகோடு
அன்று போல் புதுமையாய்...
என்றும் இனிமையாய்...
எனக்கே எனக்காய்...

என் இதயத்தில் பத்திரமாய்!!!

**********************